producer allegation about ashok selvan

‘ப்ளு ஸ்டார்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்திற்கு பிறகு அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ள இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருமலை தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் இப்படத்தின் இயக்குநர் பாலாஜி கேசவன், தயாரிப்பாளர் திருமலை, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டர்.

Advertisment

அந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் திருமலை பேசுகையில், “அசோக் செல்வனும் ஒரு படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பில் எவ்வளவு பிரச்சனை என்பது அவருக்கும் தெரியும். நான் அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு 7 மாதங்கள் அவரின் டேட்டுக்காக காத்திருந்தேன். இன்றைக்கு அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்கலாம். அப்போது நான் கொடுத்த பணம் ரூ.31 லட்சம், இப்போது வங்கியில் இருந்தால் அதில் வட்டி மட்டுமே ரூ.1 கோடி ரூபாய் வந்திருக்கும். அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்குவது சந்தோஷம் தான். ஆனால், இயக்குநரும் தயாரிப்பாளரும் இல்லை என்றால், எந்த நடிகரும் நடிகையும் இன்று கிடையாது. இன்றைக்கு ரூ.10 கோடி பிசினஸ் ஆகிறது என்றால், 10 தயாரிப்பாளர்கள் இறந்த பிறகுதான் ஒரு நடிகன் உச்சத்திற்கு போகிறான். அப்படி போனவர்கள், அந்த தயாரிப்பாளர்களை திரும்பி பார்க்காமல் இருந்தால் கீழே விழுவார்கள், அதை கண்முன் பார்த்துள்ளோம்.

Advertisment

ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுத்தால் மட்டும்தான் ஒரு நடிகர் படப்பிடிப்பிற்கு வர முடியும். வீட்டிலிருந்து அவர்கள் வரும் கார் முதல் அதற்கான பெட்ரோல் மற்றும் அவர்கள் தங்குவது, திரும்பி போவது என அனைத்தும் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் பணம். உன் கல்யாணத்திற்கு பிறகு உன் அப்பாவுக்கு கார் வாங்கி கொடுத்தியே அது தயாரிப்பாளருடையது. அவர்கள் எத்தனை சொத்தையும் தாலியையும் விற்று கொடுத்திருப்பார்களோ?. ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என அனைவரும் அவர்களது படத்தின் புரமோஷனுக்கு முன் நின்று அந்த படத்தை கொண்டு சேர்க்கின்றனர். ஒரு படம் வெளியானால் பல கோடிகளை சம்பாதிக்கப்போவது நடிகன் மட்டும்தான்; ஆனால், இந்த படத்தின் நடிகர் அசோக் செல்வன் புரமோஷனுக்கு வரவில்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்ததாக அதைச் சொல்லி அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்பார். ஒரு நாள் படப்பிடிப்பு வராமல் கேர வேனில் இருந்தார், அன்றைக்கு இரவே பணத்தை கொடுத்தோம். அதன் பிறகு நடந்த 4 மணி நேர படப்பிடிப்பில் ரூ.8 லட்சம் செலவானது. அதை அவர் தருவாரா?. இதை எல்லாம் மீறி படத்தை எடுத்தால் இயக்குநருக்கு பக்க பலமாக இருந்து புரமோஷனில் நிற்க வேண்டும். இப்படத்தின் டெக்னீசியன் இங்கு வந்து மேடையில் அமர்ந்துள்ளார்கள். அதற்கு நடிகர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் காரணம். ஆனால், நடிகர்கள் வெற்றி பெற்ற பிறகு இவர்களை தோற்கடித்துவிடுகிறார்கள். இது தொடர்ந்து சினிமாவில் நடந்து வருகிறது. இதை நான் எனக்காக சொல்ல வில்லை, எல்லா படத்திற்கும் எல்லா நடிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார்.