
மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.
இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.