priyanka

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ''நான் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. எந்தவொரு மனிதருக்கும் இந்தக் கொடுமை நிகழக்கூடாது, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி.

Advertisment

இதற்குக் காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். அந்தக் குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.