
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிரித்திவிராஜ். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படம் பெரும் வெற்றி பெற்றது. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து வெற்றிபெற்றுள்ளார். மலையாள சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிய 'லுசிஃபர்' படத்தை இயக்கியும் உள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் 'ஆடுஜீவிதம்' பட ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் நாட்டில் படக்குழுவுடன் சிக்கிக்கொண்டார். பின்னர், ஷூட்டிங்கிற்கு பெர்மிஸன் வாங்கிக்கொண்டு வெற்றிகரமாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நாடு திரும்பினார்.
தற்போது சினிமா பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து பிரித்திவிராஜ் 7 ஆம் தேதியிலிருந்து, தனது புதிய படமான 'ஜன கன மன' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில், அக்டோபர் 20 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்குக் கரோனா உறுதியானதை அறிவித்தார். மேலும், தனக்குக் கரோனா தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், தான் நலமாக இருப்பதாகவும் கூறியிருந்த அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் பிரித்திவிராஜ், தனக்கு கரோனா டெஸ்ட்டின் முடிவு நெகட்டிவ் என வந்துவிட்டதாக நேற்று அறிவித்துள்ளார். தனது கரோனா பரிசோதனை அறிக்கையைப் பதிவிட்டுள்ள அவர், "இன்று ஆன்டிஜென் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் அதை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திகொள்ளப் போகிறேன். மீண்டும் ஒருமுறை என்னைத் தொடர்புகொண்டு அன்பும் ஆதரவும் தந்தவர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.