பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரித்திவிராஜ் பேசுகையில், ''கேஜிஎஃப் 2 படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகர் யாஷ்ஷை சந்திக்க நேர்ந்தது. கேஜிஎஃப் 2 படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும் என அவரை நான் வற்புறுத்தினேன். ஏனெனில் எனக்கு அதில் நம்பிக்கை இருந்தது. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் புதிய ட்ரெண்டை உருவாக்கி, இந்தியா முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென்னிந்திய சினிமாவுக்கு இது பெருமையான தருணம். இந்திய திரையுலகினர் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. பாலிவுட், மோலிவுட், கோலிவுட் டோலிவுட் என எல்லா வுட்களும் இருக்கட்டும். இருப்பினும் எல்லா தடைகளையும் உடைத்து, கைக்கோர்த்து, இந்தியாவிற்கான திரைப்படத்தை படைப்போம்'' எனக் கூறினார்.