தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில், இயக்குநர் பிரேம் குமார் பேசுகையில், “நான் என் சின்ன வயதில் படித்தது என் தெருவில் இருந்த அரசு பள்ளியில் தான். அதில் வழங்கப்படும் சத்துணவை நான் சாப்பிட்டிருக்கேன். அந்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் இன்றைக்கு, அரசு பள்ளிகளில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என பார்க்கும் போது ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
நான் படிக்கும் போது ஒரு முதுமொழி சொல்வார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. இதுனுடைய அர்த்தம், யாசகம் பெற்றாவது படித்துவிட வேண்டுமென்பது. தமிழ்நாடு, பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வியறிவுக்கும் பெயர் போன ஒரு மாநிலம். அந்தளவிற்கு கல்வியை தன்மானத்துக்கு இணையாக நாம் பார்ப்போம். முதல்வர் ஸ்டாலின் ஐயா, படிங்க படிங்கன்னு படிப்புல மட்டும் கவனம் செலுத்த சொல்லிட்டு மத்ததை நான் பார்த்துக்குறேன்னு சொல்றார். இப்படி ஒரு வார்த்தையை யார் சொன்னாலும் உற்சாகமாக இருக்கும். அதை நம்ம மாநிலத்துடைய முதல்வர் சொல்லும் போது அதன் முக்கியத்துவம் நன்றாகவே புரிகிறது. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவங்களே செஞ்சு தராங்க. படிக்க வேண்டியது மட்டும் தான் மாணவர்களுடைய வேலையா இருக்கு. இது எனக்கு பெருமையா இருக்கு” என்றார்.