
கிறிஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத 9 ஆம் தேதி வெளியான மலையாள படம் பிரேமலு. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 8 ஆம் தேதி வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழிலும் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இப்படம் மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரேமலு படத்தின் தமிழ் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.