/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/282_12.jpg)
விஜய், நடிப்பதைத் தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும், அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதனால், விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு" எனப் பதிலளித்தார். அண்மையில் காமராஜர் பிறந்தநாளில் விஜய் தொடங்கிய இரவுப் பாடசாலைத்திட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ், "நல்ல விஷயம் தானே. தன்னார்வலர்கள் போல் விஜய்யும் செயல்படுகிறார்" என வரவேற்றிருந்தார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள்கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அறிவுரை வழங்குவதற்கு ஒன்றும் இல்லை. அரசியல் என்பது வேறு. சினிமா என்பது வேறு. நடிகர் விஜய், மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கி உள்ளது பாராட்டுதலுக்குரியது. அரசியலுக்கு வருகிறாரா?இல்லையா? என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு முன்னாள் அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது.
40 ஆண்டுகால தனது வாழ்க்கையில் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த். இனி அவரைப் போல் யாராவது பிறந்து வந்தால்தான் உண்டு. எதையும் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்ததை மக்களுக்குச் செய்தவர் விஜயகாந்த். அவரைப் போல் யாராவது வர நினைத்தால் விளைவு மிக மோசமாகத்தான் இருக்கும். பிறந்தநாள் கொண்டாடுவது, உதவி எப்படிச் செய்ய வேண்டும், அன்னதானம் எப்படி வழங்க வேண்டும் என எல்லா விஷயத்துக்கும் விஜயகாந்த் ஒரு முன்னுதாரணம்.
அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள் மற்றும் லஞ்ச ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை எப்படிக் கொண்டு வரவேண்டும் என்பதற்குத்தன்னுடைய வாழ்க்கையின் மூலம் வரலாறு படைத்தவர். அந்த வகையில் விஜயகாந்தைப் பார்த்து மக்களுக்கு நல்லது செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அவரைப் போல் வரமுடியுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)