கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் அந்தாதுன். இது அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார்.

Advertisment

prasanth

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தமிழில் இதை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அந்தாதுன் படத்தின் ரீமேக் உரிமத்தை பெற முயற்சித்தார்கள் என அப்போது தகவல் வெளியானது.

தி பியானோ டியூனர் என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்ட அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானாவாக பிரசாந்த் நடிக்கிறார். முதலில் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கப்போவதாக தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் கௌதம் மேனன் இதிலிருந்து விலகிக்கொள்ள தற்போது மோகன் ராஜா ரீமேக் செய்ய பிரசாந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

அண்மையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அளித்த ஒரு பேட்டியில், “இப்படத்தை இயக்க நாங்கள் மோகன் ராஜாவை மட்டுமே அணுகினோம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. பிப்ரவரியிலிருந்து படப்பிடிப்புக்குச் செல்வோம். கடந்த 6 மாதங்களாக பியானோ பயிற்சிக்குச் செல்கிறார் பிரசாந்த். 22 கிலோ எடையைக் குறைத்துள்ள பிரசாந்த் மலேசியாவுக்குச் சென்று மேலும் பயிற்சியில் ஈடுபட்டு இன்னும் 5 கிலோவைக் குறைப்பார். விரைவில் படக்குழு பற்றி அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.