/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/196_24.jpg)
பிரசாந்த் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இப்படம் இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரிக்க கலைப்புலி எஸ்.தாணு வழங்குகிறார். இப்படத்தில் சிம்ரன், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி நீண்ட ஆண்டுகளாகியும் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. ஆனால் பண்டிகை காலங்களில் மட்டும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தை புரமோஷன் செய்யும் விதமாக இப்படத்தின் போஸ்டரை தலைக்கவசங்களில் ஒட்டி அதை நெல்லையில் தனது ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கி வந்தனர். இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் கடந்த 13ம் தேதி வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதனைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ‘அந்தகன் ஆந்தம்...’பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். அதில் உமா தேவி மற்றும் ஏகாதேசி ஆகியோர் வரிகளில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பாடியிருந்தனர்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படம் ரீலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15லிருந்து ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே (09.08.2024) வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)