அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிரசன்னா இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பான நண்பர்களே மற்றும் நலம் விரும்பிகளே. இந்த முறை நான் அஜித்குமார் படத்தில் இணைந்திருப்பது உண்மைதான். இது எனக்கு கனவு நினைவான தருணம். மங்காத்தா படத்தை அடுத்து அஜித்தின் எந்த பட அறிவிப்பு வெளிவந்தாலும் அதில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அஜித்தின் ரசிகர்கள் தொடர்ந்து அவர் படத்தில் நான் இருப்பதாக வாழ்த்தினார்கள். அதில் சில சிறிய சிக்கல்கள் இருந்துள்ளன. ஆனால் இறுதியாக குட் பேட் அக்லி படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். நேரத்தை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது.
கடவுளுக்கு நன்றி. அஜித், ஆதிக், சுரேஷ் சந்திரா, மைத்ரி நிறுவனம் மற்றும் கடைசியாக என்னை அஜித் படத்தில் பார்க்க வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நான் எதையும் அதிகமாக இப்போது சொல்ல முடியாது. சில நாட்கள் நான் அஜித் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். ஒன்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இப்படி இருப்பதற்காகத்தான் இவ்வளவு நேசிக்கப்படுகிறார். உங்களுக்கும் எனக்கும் தெரிந்த ஒன்றுதான். ரொம்ப பணிவாக இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.