மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்காக வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை வழங்காததை கண்டித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் நேற்று திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கான போராட்டம் என்றும் இதற்காக போராடவில்லை என்றால் நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் தெரிவித்திருந்தார். 

Advertisment

மேலும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும் இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு தீர்வு காணும் வரை இந்த உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இவருடன் 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று போராட்டம் இரண்டாவது நாளை நிறைவு செய்துள்ளது. 

இந்த நிலையில் சசிகாந்த் செந்திலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “நாங்கள் உங்களோடு இருக்கிறோம் சசிகாந்த் செந்தில். இந்த போராட்டம் அரசியல் பற்றியது இல்லை. கல்வியின் உரிமை மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது. அரசாங்கத்தின் இந்த மோசமான நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவோம்” என்றுள்ளார்.