நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ‘தேசத்தின் துயரக் குரல்’ என்ற தலைப்பில், ஒப்பாரி வடிவிலான பிரச்சாரப் பாடல் வெளியாகி, இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இப்பாடலை புத்தர் கலைக் குழுவைச் சேர்ந்த மகிழினி மணிமாறன் பாடியுள்ளார். இப்பாடலை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்
அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், இப்பாடலை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடக்கும் தேர்தல். எதை நாம் தேர்ந்தெடுக்க போகிறோம்?” என பதிவிட்டுள்ளார்.