prakash raj questioned pawan kalyan regards tirupathi laddu issue

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகக் சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்து விசாரித்த தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம், திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்தது. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய நடிகர் மற்றும் அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது என்றார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருபதாவது, “திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இது தொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோவில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

இந்த நிலையில் பவன் கல்யாண் பேச்சிற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்வினையாட்டியுள்ளார். எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “டியர் பவண் கல்யாண். நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இது நடந்துள்ளது. தயவு செய்து தீவிர விசாரணை செய்யுங்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுங்கள். அதைவிட்டு விட்டு ஏன் மக்களை பயமுறுத்துகிறீர்கள். அதை ஏன் தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். நாட்டில் போதுமான வகுப்புவாத பிரச்சனைகள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment