தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துவரும் பிரகாஷ் ராஜ், நடிகை லலிதா குமாரியை 1994இல் திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகள் சுமுகமாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கையில், கடந்த 2009ஆம் ஆண்டில் விரிசல் ஏற்பட்டது. பின், இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, போனி வர்மா என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் திருமணம் செய்துகொண்டார்.
பிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதிக்கு வேதந்த் என்றொரு மகன் உள்ளார். இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதி நேற்று (24.08.2021) தங்களுடைய 11வது திருமணநாளைக் கொண்டாடினர். அப்போது தன்னுடைய மகன் வேதந்த்தின் ஆசைக்கு இணங்கி, தன்னுடைய மனைவியை பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். இத்தகவலைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார்.