Skip to main content

“என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” - பிரகாஷ் ராஜ்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
prakash raj about pranav jewelery owner fraud case

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். 

இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜுவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால், முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். பின்பு உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் நேற்று மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த கடையின் விளம்பரப் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை எனப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தெரிவித்துள்ளனர். கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என்னை நம்பி எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

“மாற்றத்திற்காக வாக்களித்தேன்” - பிரகாஷ் ராஜ்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
prakash raj voted his vote in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவங்க தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு பண்ண போறவங்க. உங்களுடைய குரல் அங்கு எழுப்பனும்னா ஓட்டு போடுங்க. நீங்க ஓட்டு போடலைன்னா, நீங்க கேள்வி கேட்கிற தகுதியும் அந்த உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், அவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார். 

இதனிடையே அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், “மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்தேன். நான் நம்பும் மற்றும் என்னுடைய குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யும் வேட்பாளருக்கு வாக்களித்தேன்” என்றார்.