விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு முன்னதாக ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு என்னுடையது என இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமின்றி இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனமும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்பு படத்தின் பெயர் ‘எல்.ஐ.கே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் பின்பு கதாநாயகி க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டது படக்குழு.
இப்படத்தின் முன்னோட்டம் இம்மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அதே நாளில் கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்ததால் தள்ளி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது வருகின்ற 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகவாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் தீபாவளி ரேஸில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ‘எல்.ஐ.கே’ படமும் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படமும் வெளியாகுமா, அல்லது ஏதேனும் ஒரு படம் தள்ளி போகுமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். விரைவில் டியூட் பட அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரை வட்டாரங்களில் டியூட் படம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.