பிரதீப் ரங்கநாதன் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் ‘டியூட்’. இரண்டு படமுமே தீபாவளி வெளியீடாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதாவது ஒரு படம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இரண்டு படக்குழுவும் தீபாவளி வெளியீட்டில் உறுதியாக இருக்கிறார்களாம்.
இந்த நிலையில் டியூட் படத்தில் இருந்து மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாட்டு நல்ல வரவேற்பை பெற்று ரீல்ஸில் ட்ரெண்டானது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘நல்லாரு போ’ பாடல் போதிய வரவேற்பு பெறவில்லை.
இப்பாடல்களை தொடர்து தற்போது மூன்றாவது பாடல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் சுவாரஸ்யமாக பிரதீப் ரங்கநாதன் பாடகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான புரொமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் சாய் அபயங்கர் பிரதீப் ரங்கநாதனுக்கு பாட சொல்லிக்கொடுக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. அதாவது சாய் அபயங்கர் பாட்டு சொல்லிக்கொடுக்கும் இடையிலே முந்திக் கொண்டு பிரப்தீப் ரங்கநாதன் பாடும் நகைச்சுவையான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முதலில் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் பின்பு ஹீரோவாக மாறி தற்போது பாடகராகவும் உருவெடுத்துள்ளார்.