pradeep ranganathan film dude in trouble for title issue

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் சரத் ​​குமார், ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ‘டியூட்’ என வைத்துள்ளதாக தெரிவித்த படக்குழு தலைப்புடன் கூடிய புதிய போஸ்டர்களையும் வெளியிட்டனர். மேலும் தீபாவளி வெளியீடாக இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு நடிகரும் இயக்குநருமான தேஜா, ‘டியூட்’ என்ற தலைப்பு தனது படத்திற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பே இந்த தலைப்பில் ஒரு படத்தை அறிவித்ததாக கூறும் அவர், பிரதீப் ரங்கநாதன் பட தயாரிப்பு நிறுவனத்துடன் எந்த மோதலையும் தொடர விரும்பவில்லை என சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.