
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து ‘ரைஸ் ஆஃப் டிராகன்...’, ‘வழித்துனையே’ மற்றும் சிம்பு பாடிய ‘ஏண்டி விட்டு போன’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பேட் பாய்ஸ ரொம்ப புடிக்கும்’ என பள்ளியில் ஒரு பெண் கூறும் வசனத்தோடு ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லர் பின்பு காலேஜ் தளத்துக்கு விரிகிறது. அங்கு அரியர் வைத்துக் கொண்டு படிக்காத மாணவனாகவும் அங்கு பேராசிரியராக இருக்கும் மிஷ்கினுக்கு பிடிக்காத மாணவனாகவும் பிரதீப் ரங்கனாதன் இருக்கிறார். அதே சமயம் அங்கு அனுபமா பரமேஸ்வரனை காதலிக்கும் அவர் அவரை கல்யாணம் செய்ய முடியாமல் பிரிகிறார். அதற்கு காரணமாக அவர் வாழ்க்கையில் தோற்பதாக அனுபமா சொல்லும் நிலையில் இறுதியில் வென்றாரா இல்லையா என்பதை காதல், காமெடி, எமோஷன் கலந்து படக்குழு சொல்லியிருப்பது போல் தெரிகிறது.
இதனிடையே கயாடு லோஹரோடும் பிரதீப் ரங்கநாதன் காதலில் இருப்பதாக தெரிகிறது. இந்த காதல் என்ன ஆனது, இறுதியில் யாரை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பதையும் சொல்வது போல் தெரிகிறது. ட்ரெய்லரின் இறுதியில், ஆரம்பத்தில் பள்ளி காலத்தை காட்டியது போல் அதே காலகட்டத்தில் பிரதீப் ரங்கநாதன், ‘நல்லா படிச்சா, நல்ல பையனா இருந்தா பொன்னுங்களுக்கெல்லாம் புடிக்கும்னு சொன்னாங்கல்ல, அதெல்லாம் பச்ச பொய்யில்ல’ என்று நண்பனிடம் புலம்புவது போல் பேசும் வசனத்தோடு முடிகிறது. இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.