/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/252_28.jpg)
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி’. இப்படம் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் கதையாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இதன் மூலம் சுசீந்திரனும் இமானும் 10வது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் பிரபு சாலமனும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “நல்ல ஒரு இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை திரையில் சொல்ல முடியாது. நம்முடைய படங்கள் எந்தளவு மண்சார்ந்த படங்களாக பிரதிபலிக்கிறதோ நாம் உலக திரைப்படங்களாக காட்சியளிப்போம். இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது இன்றைய சூழலில் பாசிட்டிவாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் எடுத்த முடிவுதான். வெஸ்டர்ன் கலாச்சாரத்தை எடுக்காமல் இந்த மண் சம்பந்தமான கதையை பண்ணியிருக்கிறார். அந்த துணிச்சலுக்காக சுசீந்திரனை பாராட்டலாம். அவரிடம் இருந்து வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல... இது போன்ற படங்களை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடத்தை இந்தப் படம் பூர்த்தி செய்யும். ஒரு படத்தை போர் அடிக்காமல் கொண்டுபோவது பெரிய சவால். அதை இந்தப் படம் அழகாக செய்திருக்கிறது. முரணான ஒரு படத்தை எடுத்து வைத்துவிட்டு அதன் மூலம் பெயர் வாங்கிவிடலாம் என்று நினைக்கிற சூழலில் நேர்மையாக ஒரு படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார்.
இந்தப் படம் ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் கடைசி வரை நட்போடு இருக்க முடியுமா என்ற சவாலைப் பேசுகிறது. இதை எங்க டைரகடர் அகத்தியன், பண்ணியிருந்தார். கதாநாயகனும் கதாநாயகியும் கடைசி வரை பார்க்காமலே காதலிக்கிறார்கள், இந்த ஒன் லனை சொன்னதுமே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் இந்திய வரலாற்றையே திருப்பி போட்டது. 40 வருடங்களாக யாருமே தமிழ் சினிமாவில் இருந்து தேசிய விருது வாங்காமல் இருந்த போது அகத்தியன் வாங்கினார். அதனால் வித்தியாசமான திரைக்கதை கண்டிப்பாக வெற்றி பெறும். ஒரு நல்ல படத்தை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது அதனுடைய வீச்சை விளையாடி கொண்டு தான் இருக்கும். இந்தப் படம் அந்த வெற்றியைத் தொடும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)