prabhu deva introduced his son in dance concert

பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவா தலைமையில் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. முதன் முறையாக பிரபு தேவா நேரடி நடன நிகழ்ச்சி நடத்தியதால் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே சூர்யா, பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ரௌடி பேபி பாடலுக்கு மேடையில் தனுஷும் பிரபு தேவாவும் இணைந்து நடனமாடினார்கள். பின்பு பேட்ட ராப் பாடலுக்கு பிரபு தேவா நடனமாடிக் கொண்டிருக்கையில் மேடைக்கு கீழ் உட்கார்ந்திருந்த வடிவேலுவிடம் அவர் செய்த நகைச்சுவையான செயல் பலரை கவர்ந்தது. அதே சமயம் அதிதி ஷங்கர், பரத், சாந்தனு உள்ளிட்ட சிலர் இந்த நிகழ்ச்சியில் நடனமாடினர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் பிரபு தேவா மகனும் நடனமாடினார். அவர் பேட்ட ராப் பாடலுக்குத் தந்தை பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரபு தேவா, “என் மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இது நடனத்தை விட பெரிதானது. அதாவது மரபு, ஆர்வம் மற்றும் பயணம் இப்போது தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பிரபு தேவா மகனுக்கு பலரும் வாழ்த்து தெரிவிக்க இப்போது அந்நிகழ்ச்சியில் மகனுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு அந்த நடனத்தின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.