prabhas donates for kerala wayanad landslide

கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை அதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400க்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதில் கண்டுபிடிக்கப் படாதவர்கள் மட்டும் 216 மேற்பட்டோர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து 9வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது ஆறுதலையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த பேரிடரில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்களது குடும்பம் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இயக்கங்களிலிருந்து நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் இணைந்து அம்மாநில அரசு அறிவித்துள்ள (keralacmdrf@sbi) யூ.பி.ஐ. மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி, உதவி வருகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்கள் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்து உதவி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழ்த் திரைப்பிரலங்களில் விக்ரம் ரூ. 20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், நயன்தாரா - விக்கேஷ் சிவன் தம்பதி ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினர். மேலும் மலையாள திரையுலகிலிருந்து மோகன்லால் ரூ.3 கோடி மற்றும் மம்மூட்டி ரூ.20 லட்சமும், அவரது மகன் துல்கர் சல்மான் ரூ.15 லட்சமும் நன்கொடை வழங்கினர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி - ராம்சரண் இருவரும் இணைந்து ரூ.1 கோடி மற்றும் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது மற்றொரு தெலுங்கு நடிகரான பிரபாஸ், கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.