உலகம் முழுவதும் பிரபலமானவர் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். இவர் தன்னுடைய பத்து வயதிலேயே உலகம் முழுக்க தன்னுடைய பாப் பாடல்களின் மூலம் பிரபலமடைய தொடங்கிவிட்டார். பேபி என்னும் இவருடைய பாடல் தமிழகத்தில் கூட பலரும் முனுமுனுத்துக்கொண்டிருந்தனர்.

25 வயதாகும் ஜஸ்டின் கடந்த 2018ஆம் ஆண்டுதான் அமெரிக்க மாடல் ஹெய்லி ரோட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது லைம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிலந்தி போல உள்ள உண்ணிகளால் பரவும் இந்த நோயால் வருடத்திற்கு 3 லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நோயிற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போனால் மூட்டு, இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தில் இந்த நோய் தொற்று பரவும். பின்னர், அதனால் வலியும் வீக்கமும் அதிகமாக ஏற்படும்.
இந்த நோயால் பாதிப்படைந்ததை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜஸ்டின், “ஜஸ்டின் பீபர் பார்க்க மோசமாக இருக்கிறார். போதைப் பொருள் எடுத்துக் கொள்கிறார் என்று பலர் சொன்ன அதே வேளையில், எனக்குச் சமீபத்தில் லைம் நோய் இருப்பது தெரியவந்ததைப் பற்றி யாரும் உணரவில்லை. அது மட்டுமல்ல எனது தோல், மூளைச் செயல்பாடு, ஆற்றல், மொத்த ஆரோக்கியத்தையும் பாதித்த காய்ச்சலும் வந்தது.
விரைவில் நான் யூடியூபில் வெளியிடவிருக்கும் வீடியோ தொடரில் இது குறித்த விளக்கங்கள் இருக்கும். நான் எதையெல்லாம் போராடிக் கடந்து வருகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கடந்த சில வருடங்கள் மோசமாக இருந்தன. ஆனால் இதுவரை தீர்க்க முடியாமல் இருந்த இந்த நோயைத் தீர்க்கும் சரியான சிகிச்சையை எடுத்து வருகிறேன். மீண்டும் மீண்டு வருவேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.