
டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பாடகராக அறிமுகமானவர் ஸ்மிதா. பின்பு, அவருடைய குரலுக்கு பாப் பாடல்தான் பொருந்தும் என்று பலரும் அறிவுரை கூறியதால், அதில் கவனம் செலுத்தினார்.
இதனை அடுத்து 2000ஆம் ஆண்டில் ‘ஹாய் ராப்பா’ என்ற ஆல்பத்தை ரிலீஸ் செய்தார் ஸ்மிதா. அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானார்.
'மல்லீஸ்வரி', 'ஆட்டா' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாகவும் அறியப்பட்டவர் ஸ்மிதா. இவருக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று (ஆகஸ்ட் 4) மோசமான நாள். நேற்று உடலில் வலி ஏற்பட்டது. கடுமையாக செய்த உடற்பயிற்சியால் வலி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கும் சஷாங்குக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் பெரிதாக இல்லை. கரோனாவை விரட்டி, பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் பாதுகாப்பாக வீட்டில்தான் இருந்தோம். ஆனாலும், கரோனா எங்களைத் தேடி வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.