பக்தி பாடல்கள், திரைப்பட பாடல்கள் என சுமார் 5,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளர் பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன். 1967ஆம் ஆண்டு முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’, ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை...’ மற்றும் எம்.ஜி.ஆரின் ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ உள்ளிட்ட ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.
திரைப்படங்களைத் தாண்டி மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்டவைகளுக்கு வசனம் எழுதியுள்ளார். கவிஞராகவும் இருதுள்ள இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கொடுக்கப்படும் கலைமாமணி விருதை வென்றிருந்தார். அதோடு தமிழகத்தை ஆண்ட அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இதன் மூலம் 5 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையை பெற்றார்.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியை பூர்விகமாகக் கொண்ட இவர், சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இப்போது வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 90. இவரது மறைவு இலக்கிய மற்றும் சினிமாத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் பெரம்பூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று மாலையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.