டெல்லியில் பிரபல நாடக்குழுவான லவ் குஷ் ராம்லீலா குழு, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ராமாயணம் நாடகத்தை இன்று முதல் அக்டோபர் 3 வரை நடக்கிறது. இதில் கின்ஷுக் வைத்யா ராமராகவும், ஆர்யா பப்பர் ராவணனாகவும், ரினி ஆர்யா சீதையாகவும், பாஜக எம்பி மனோஜ் திவாரி பரசுராமராகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் பிரபல பாலிவுட் மற்றும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் பூனம் பாண்டே ராவணன் மனைவியான மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் பூனம் பாண்டேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
அந்த அமைப்பின் டெல்லி பகுதி சுரேந்திர குப்தா, ராம்லீலா குழுக்கு எழுதிய கடிதத்தில், “ராம்லீலாக்களுக்கான கலைஞர்கள் நடிப்புத் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுப்ப்தை தாண்டி, கலாச்சாரம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். மண்டோதரி ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம், ஏனெனில் அவர் நல்லொழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் சிறந்த மனைவியின் அடையாளமாகக் கருதப்படுகிறார். ஆனால் பூனம் பாண்டேவின் கடந்த கால சர்ச்சைகள் பக்தர்களை புண்படுத்தும். அதனால் பாரம்பரிய நாடகப் பின்னணி கொண்ட நடிகையையோ அல்லது வேறுயாரையோ தேர்வு செய்ய வேண்டும்” எனப் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ராம் லீல குழு தலைவர் அர்ஜூன் குமார் பதிலளிக்கையில், “நடிகைக்கு சர்ச்சைக்குரிய கடந்த காலம் இருந்தாலும் அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். பெண்கள் அதிகாரம் பற்றி நாம் பேசும் அதே நேரத்தில் பெண்கள் சிறந்து விளங்கும்போது அதை எதிர்க்கிறோம். பூனம் பாண்டே இந்த வேடத்தில் நடித்தால், அவர் கலாச்சாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும், அது அவரது மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைச் சென்றடையும், மேலும் அவர்கள் நமது கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பதற்கும் உதவும்” என்று கூறினார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் தற்போது பூனம் பாண்டே தற்போது சர்ச்சை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “மண்டோதரியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த அழகான பாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். நாளை நவராத்திரி தொடங்குவதால், 9 நாள் விரதம் இருக்க முடிவெடுத்துள்ளேன். அதனால் என் உடலும் மனமும் சுத்தமாக இருக்கும்” என்றார். இதன் மூலம் பூனம் பாண்டே தான் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். மேலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் கடந்த ஆண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.