Skip to main content

“எங்களால் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும்...”- பூஜா பட் காட்டம்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
pooja bhatt

 

சுசாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு குறித்த விவாதம் நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகாரம் மற்றும் பணம் மிக்கவர்களின் வாரிசுகள் வெளியிலிருந்து வரும் திறமையாளர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விடுகின்றனர் என்பதே பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

 

இந்நிலையில் பிரபல இயக்குனரான மகேஷ் பட்டின் மகள் பூஜா பட் வாரிசு அரசியல் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்கள் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிற வாரிசு அரசியல் பற்றி கருத்துச் சொல்லும்படி என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஒட்டுமொத்த திரைத்துறையைக் காட்டிலும் ஏராளமான புதிய திறமையான நடிகர்களையும், இசையமைப்பாளர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்ணாக, என்னால் இதற்குச் சிரிக்க மட்டுமே முடிகிறது. உண்மைகள் யாருக்கும் சென்றடைவதில்லை. மாறாக புனைவுகளே அதிகமாகச் சேர்கின்றன.

 

பட் குடும்பத்தினர் பிரபலமான நடிகர்களுக்கு எதிராக இருப்பதாகக் குற்றச்சாட்டுகளும், புதியவர்களை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களோடு பணிபுரிந்ததால் ஒதுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று அதே மக்கள் வாரிசு அரசியல் செய்கிறார்களா? கூகிள் செய்து பார்த்துவிட்டு ட்வீட் செய்யுங்கள் நண்பர்களே. யோசித்துப் பேசுங்கள் என்று கூட சொல்லப் போவதில்லை.

 

கங்கணாவை பொறுத்தவரை அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை, இல்லையென்றால் 'கேங்ஸ்டர்' படத்தில் அவர் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க மாட்டார். ஆம், அனுராக் பாசு தான் அவரை கண்டுபிடித்தார், ஆனா விஷேஷ் பிலிம்ஸ் அவருக்கு உறுதுணையாக நின்று படத்துக்கு முதலீடு செய்தது. இது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய எல்லா முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம்.

 

'சடக் 2' படத்தில் கூட சுனில் ஜீத் என்கிற ஒரு புதிய திறமையாளருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலிருந்து ஒரு இசை ஆசிரியர் எங்கள் அலுவலகத்துக்கு என்னைச் சந்திக்க நேரம் கூட அனுமதி வாங்காமல் ஒரு ஆர்மோனியம், ஒரு கனவு, இஷ்க் கமால் என்ற ஒரு அற்புதமான பாடலுடன் வந்தார். அதைக் கேட்டதுமே பிடித்துப் போன என் தந்தை அவரை படத்துக்கு ஈர்த்து விட்டார்.

 

எனவே வாரிசு அரசியல் என்ற வார்த்தையுடன் வேறு யாரையேனும் வம்பிழுக்கவும். பல ஆண்டுகளாக நாங்கள் அளித்த வாய்ப்பின் மூலம் திரைப்படங்களில் தங்களுக்கான வழியை அமைத்துக் கொண்டவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும். அவர்கள் மறந்திருந்தால், அது அவர்களுக்குத் தான் நஷ்டம். எங்களுக்கல்ல” என்று தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்