Skip to main content

பிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள்! பொன்மகள் வந்தாள் - விமர்சனம் 

pmv


எப்போதோ நடந்த ஒரு விருது விழாவில், கோவிலுக்குக் கொடை கொடுக்கும் அளவிற்கு மருத்துவத்திற்கும் பள்ளிகளுக்கும் கொடை அளிக்க வேண்டும் என்று ஜோதிகா பேசியது 'லாக்டவுன்' தொடக்க காலத்தில் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை சம்பாதித்து, தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னணி நடிகை நடித்த படம் திரையரங்கில் ரிலீஸாகாமல் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸாகியுள்ளது. ஆம், திரையுலகின் ஒரு சாராரின் அதிருப்தியை புறந்தள்ளி மிகப்பெரிய ஒரு அடியாக, OTTயில் நேரடியாக இந்தப் பொன்மகள் வந்துவிட்டாள். ஜெ.ஜெ.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, ஆர்.பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான இப்படம் நள்ளிரவில் அமேசான் ப்ரைமில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

குழந்தைகளை கடத்திக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரியான ஜோதி என்ற பெண், இரண்டு ஆண்களை கொலை செய்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து சைக்கோ என்று சொல்லப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரிக்கும்போது, அவரது வீட்டில் மேலும் பல சிறுமிகளின் பிணங்கள் கிடைக்கின்றன, விசாரணையின்போது போலீஸிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய, போலீஸார் அந்தப் பெண்ணை சுடுகிறார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் மீது குற்றம் சுமத்தப்பட்டு, இந்த வழக்கு முடிக்கப்படுகிறது. முடிந்துபோன இந்த வழக்கை பதினைந்து வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் ‘வெண்பா’ என்னும் ஜோதிகாவும் ‘பெட்டிஷனர் பெத்துராஜ்’ என்னும் பாக்யராஜும் தொடங்குகிறார்கள். மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இந்த வழக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா? உண்மையில் யார்தான் குற்றவாளி? எதற்காக 15 வருடக் காத்திருப்பிற்கு பிறகு வழக்கை விசாரிக்க வேண்டும்?... என பல கேள்விகளை எழுப்பி, எழுந்த கேள்விகளுக்கு சரியாகப் பதில்களை தந்ததா இந்த இரண்டு மணிநேர நீதிமன்ற ட்ராமா படம்?

'பொன்மகள் வந்தாள்', அதன் நீதிமன்ற காட்சிகளில் நிறைய டெம்ப்ளேட்டான காட்சி வடிவமைப்பு, திரைக்கதை கட்டமைப்பை கொண்டிருந்தாலும் அதில் சொல்லப்பட்ட விஷயம்தான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளும், பாலியல் சீண்டல்களும், வன்புணர்வுகளும் பாதிக்கப்பட்டவர்களால் பெரும்பாலும் வெளியுலகுக்கு சொல்லப்படுவதில்லை. அதையும் தாண்டி வன்முறை, கொலை என்று நடக்கும்போதுதான் பல சம்பவங்கள் வெளியுலகுக்குத் தெரியவருகின்றன. அப்படி அதை அவர்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னால் கூட அதை வேறு விதமாகப் பார்க்கும் கலாச்சார காவலர்களும் இங்குண்டு. இப்படிப்பட்ட இந்த உலகில் பச்சிளம் பெண் குழந்தைகளுக்கும், காமம் என்றாலே என்னவென அறியாத சிறுமிகளுக்கும் நடக்கும் பாலியல் சீண்டல்களை, வன்புணர்வுகளை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். சொல்லப்பட வேண்டிய, சொல்ல மறந்த இந்தக் கதையை தனது முதல் படத்திலேயே சொன்ன இயக்குனர் ஃப்ரெட்ரிக்குக்கும் அதை ஏற்று நடித்திருக்கும் ஜோதிகாவுக்கும் நூறு ஹார்ட்டின் ஸ்மைலீ கொடுக்கலாம். இப்படிப்பட்ட ஒரு கதை, இன்னும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய, இன்னும் சிறப்பான திரைக்கதை, வசனங்கள் தேவைப்படுகின்றன. அதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
 

ponmagal vanthal


கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சிறிது பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஒளிப்பதிவாளர் மதியின் கண்களின் வழியாக ஊட்டி மிகவும் கலர்புல்லாகவும், ஒரு சில காட்சிகளில் நமக்கு இருண்மை உணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஜோதிகா, தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சமூக அக்கறை, கணம் ஆகியவற்றை உணர்ந்து நடிக்கிறார். பார்த்திபன், பாக்யராஜ் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோரை பல வருடங்கள் கழித்து திரையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வில்லனாக வரும் தியாகராஜனின் கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்தூவம் கொடுத்திருக்கலாம். 

இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த நீதி, நிஜ உலகில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவம், காசி என நாம் தினம் தினம் காணும் அநீதிகளுக்கு எதிரான நம் உணர்வை சிறிதளவேனும் தூண்டுவதாக இப்படம் அமைந்ததே இதன் பெருவெற்றி. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்