pondicherry minister lakshmi narayanan about vignesh shivan meeting

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் அதையொட்டி சில தகவல்களும் வெளியாகியிருந்தது.

Advertisment

அமைச்சரிடம், புதுச்சேரி கடற்கரை சாலையில் இருக்கும் `சீகல்ஸ்’ ஹோட்டலை ஏற்று நடத்த விக்னேஷ் ஷிவன் அனுமதி கேட்டதாகவும் அதை கேட்ட அமைச்சர், அதிர்ச்சியாகி அந்த ஹோட்டல் அரசுக்கு சொந்தமான ஹோட்டல் என்பதால் அதை தனியாருக்கு கொடுக்க முடியாது என்றும் கூறியதாகவும் கூறப்பட்டது. மேலும் விக்னேஷ் சிவன், ஒப்பந்த அடிப்படையில் எதாவது கிடைக்குமா என அமைச்சரிடம் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர் 2017ஆம் ஆண்டு ஏலத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்ததாகவும் பரவலாக பேசப்படுகிறது. அதோடு விக்னேஷ் சிவன், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டதாகவும் அதற்கு புதுச்சேரி துறைமுக வளாகத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய ஒரு பொழுது போக்கு மையம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து கட்டினால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறியதாக பேசப்பட்டது. இது தொடர்பாக விக்னேஷ் சிவன் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானார்.

Advertisment

இதையடுத்து அமைச்சரை சந்தித்தது குறித்து விளக்கமளித்த விக்னேஷ் சிவன், “புதுச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் ஒரு செய்து முட்டாளதனமானது. புதுச்சேரி விமான நிலையத்தில் என்னுடைய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அனுமதி கேட்க அமைச்சரை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வரையும் சுற்றுலா துறை அமைச்சரையும் சந்திக்க நேர்ந்தது. எதிர்பாராதவிதமாக உடன் வந்த உள்ளூர் மேலாளர் எனது சந்திப்புக்குப் பிறகு அவரிடம் ஏதோ விசாரித்தார், அது காரணமின்றி என்னுடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அது தேவையற்றவை” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் விக்னேஷ் சிவன் சந்திப்பு குறித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரியில் இசை நிகழ்ச்சி நடத்த இடம் வேண்டும் என கேட்டார். அதற்கு சில ஆலோசனைகள் நான் சொன்னேன். அரசாங்க இடத்தில் பெரிய மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டார். அதற்கு முறையான நடைமுறைகளை பின்பற்றினால் அரசாங்கம் பரிசீலிக்கும் என சொன்னேன். அப்போது அவருடன் வந்திருந்த உள்ளூர் சினிமாத்துறையை சேர்ந்த நபர் என்னிடம் அரசுக்கு சொந்தமான ஓட்டல் விலைக்கு வருவதாக சொல்லி அதை விலைக்கு தரமுடியுமா? என்று கேட்டார். அதற்கு நான் அது தவறான தகவல், அப்படி எல்லாம் அரசுக்கு சொந்தமான சொத்தை விலைக்கு தரமுடியாது என்று மறுத்துவிட்டேன். இதை விக்னேஷ் சிவன் நேரடியாக என்னிடம் கேட்கவில்லை” என்றார்.

Advertisment