இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடைக்ஷன்’ தயாரிப்பில் கெத்து தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. இப்படத்தில் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் பழங்குடியின மக்களை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஸ்பெஷல் ஷோ நடந்துள்ளது. இதில் முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, பேசுகையில், “மக்கள் நக்சல் பாரி பக்கம் தான் நிற்கிறார்கள். அதிகாரம் பக்கம் ஒருபோதும் நிற்கமாட்டார்கள். இதை இப்படம் உணர்த்துகிறது. நக்சல்பாரிகளை எந்த சக்தியாலும் ஒழிக்க முடியாது. ஏனென்றால் மக்களுக்கான போராளிகள். மக்களுக்கான பாதுகாவலர்கள். இதையும் உணர்த்தக்கூடிய சிறந்த படமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அதியன் ஆதிரை முற்போக்காக சிந்திக்கிறார் என்பதை, இந்த படம் நமக்கு மிக ஆழமாக உணர்த்துகிறது. இத்திரைப்படத்தை அனைத்து தரப்பாலும் குறிப்பாக முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனையுள்ள அனைவரும் போற்ற வேண்டும். அதோடு படத்தை பாராட்ட வேண்டும், வரவேற்க வேண்டும், வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், முத்தரசன் பேசுகையில், “நல்ல திரைப்படம். யதார்த்த நடந்து கொண்டிருக்கக்கூடிய சம்பவ நிகழ்வுகளை எல்லாம், இந்தப் படம் அற்புதமாக சித்தரித்திருக்கிறது. ஜனநாயகத்தின் நம்பிக்கை உடையவர்கள், இடதுசாரிகள், முற்போக்கு கருத்து உடையவர்கள், தமிழ்நாட்டு மக்கள் படத்தை பார்ப்பதன் மூலமாக ஆதரவை தெரிவிக்க வேண்டும். இது போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டிற்கு நல்ல படங்கள் கிடைக்கும்” என்று தெரிவித்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இவர்களுடன் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தியும் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் “இது போன்ற தலைப்புகளை மற்றும் கதைகளங்களை எடுப்பதற்கு பலர் தயக்கம் காட்டுகின்ற ஒரு சூழலில் மக்களுக்கும் மண்ணுக்கும் பயன்படுகின்ற வகையில், இப்படத்தை கொடுத்த தோழர் அதியன் ஆதிரைக்கு எனது வாழ்த்துகள். இது போன்ற துணிச்சலான படைப்புகள் தான் மக்களை சரியான திசை வழியில் கொண்டு செலுத்துகின்ற ஒரு படைப்பாகவும் அமையும் . இந்த திரைப்படத்தை குறித்து விவாதிப்பதும் அனைவரும் சென்று பார்ப்பதுமான பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார்.