/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/218_1.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார். இருப்பினும் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்தனர். இருப்பினும் பாமக தரப்பு ஜெய் பீம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நடிகர் சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடக் கூடாது என பாமக தரப்பில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'எதற்கும் துணிந்தவன்' படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க சென்னை தி.நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'ஜெய் பீம்' படத்தின் வெளியீட்டின் போது சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)