/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/05_20.jpg)
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகை பவுலின் எனும் தீபா (29), கடந்த 18ஆம் தேதி அவரது அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார். நடிகையின் பிரேத பரிசோதனை முதல்கட்ட அறிக்கையில், அவர் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை தீபாவின் அறையை போலீசார் சோதனை செய்த போது, "நான் ஒருவரைக் காதலித்தேன். ஆனால், அவர் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. இதனால், இந்த உலகில் வாழ விரும்பவில்லை” என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக நடிகை தீபாவின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரித்தனர். அதில் அவர், கடைசியாக சிராஜூதீன் என்பவரிடம் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.
சிராஜூதீன் என்பவர் சினிமா தயாரிப்பாளர் என்றும், அவரை தீபா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தீபா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சிராஜூதீனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்டதற்கு முதல் நாள், அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வீடியோவில் நடிகை தீபா ஆட்டோவில் வந்து இறங்கி, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் மிகுந்த சோர்வுடன் நடந்து செல்வது போன்ற காட்சிகளும், அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவரது நண்பர் பிரபாகரன் மிகுந்த பதற்றத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் ஓடி வருவது போன்றும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு நடிகை தீபாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தங்களது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதிக்கு கொண்டு சென்று நடிகை பவுலின் ஜெசிகாவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். இன்று முதல் தீபாவின் தற்கொலை வழக்கில் தங்கள் முழு விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)