வெறுப்பை விதைக்கும் படத்துக்கு கௌரவமா? - தேசிய விருது குழுவை சாடிய பினராயி விஜயன்

181

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகளை வென்றுள்ளது. மேலும் வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆவணப்பட பிரிவில் லிட்​டில் விங்ஸ் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்துள்ளது. 

இதனிடையே சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவு பிரிவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் வெளியான இப்படம் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக சர்ச்சையானது. அதாவது கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதாக படத்தில் பேசப்பட்டிருந்தது. இப்படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைல் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது கொடுத்தது குறித்து தேசிய விருது குழுவை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய விருது நடுவர் மன்றம், சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளா, இந்த முடிவால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், உண்மை மற்றும் நாம் மதிக்கும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

national award Pinarayi vijayan the kerala story
இதையும் படியுங்கள்
Subscribe