சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துதரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்து தாடை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட முழுவதும் குணமடைந்து விட்டதாகத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. அதில் மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்துப் பேசியதாகத்தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக,விஜய் ஆண்டனி சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். மேலும்,இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அம்மாவிற்காக குறிப்பிட்ட நாட்கள் பிச்சைக்காரனாக மாறியிருப்பார். அதைப்போலவே இரண்டாம் பாகத்திலும் துபாய் நாட்டில் இருக்கும் ஒரு பெரிய பிச்சைக்காரர் பற்றி பார்ப்பீர்கள் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.