Skip to main content

‘பிச்சைக்காரன் 2' பட வழக்கு - விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

pichaikkaran 2 release issue update

 

‘பிச்சைக்காரன்’ பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படம் கடந்த 14 ஆம் தேதி (14.04.2023) வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. 

 

இதையடுத்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தயாரிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் தனது அனுமதி இல்லாமல் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ரூ. 10 லட்சம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் ஆண்டனி பதிலளிக்க வேண்டி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கடந்த மாதம் 29ஆம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில், "ஆய்வுக்கூடம் படம் குறித்த தகவல் எதுவும் தனக்கு தெரியாது. அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லை. வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்தேன். பிச்சைக்காரன் 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படம் வெளியாவதை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாவது தள்ளிப் போனதால் பொருளாதார ரீதியாக எனக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. மேலும் மன உளைச்சலால் வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இதையடுத்து நீதிபதி எஸ்.சௌந்தர் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விஜய் ஆண்டனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் வருகிற மே 19 ஆம் தேதி (19.05.2023) திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் ஆண்டனிக்கு காதல் கதை கைகொடுத்ததா? - ரோமியோ விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
vijay antony mirnalini ravi romeo movie review

அதிகமாக கிரைம் கில்லர் மற்றும் சென்டிமென்ட் படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்ற விஜய் ஆண்டனி இந்த முறை காதல் திரைப்படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக வெளியாகி இருக்கும் ரோமியோ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா? 

தன் குடும்பத்திற்காக வாங்கிய கடனை அடைத்து நல்ல நிலைமைக்கு வர மலேசியாவுக்கு சென்று வேலை செய்துவிட்டு நன்றாக சம்பாதித்து அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி. இதனாலேயே அவருக்கு வயது முதிர்ந்து விடுகிறது. இருந்தும் தன்னுடைய பிரைம் டைமில் செய்ய முடியாத காதலை இனிவரும் நாட்களில் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் விஜய் ஆண்டனி, ஒரு மரண நிகழ்வில் நாயகி மிருணாளினியை பார்க்கிறார். விஜய் ஆண்டனிக்கு கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே தன் குடும்பத்துக்கு தெரியாமல் சென்னையில் ஐடியில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற முனைப்பில் கிடைக்கின்ற சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டு சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருணாளினி வீட்டில் மாட்டிக்கொள்கிறார்.

vijay antony mirnalini ravi romeo movie review

இதைத்தொடர்ந்து அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்பொழுது மிருணாளினி, விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு தான் சென்னையிலேயே வசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு விஜய் ஆண்டனியும் சம்மதிக்க திருமணம் ஜோராக நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு சென்னை வரும் விஜய் ஆண்டனிக்கு மிருணாளினியின் சுயரூபம் வெளிப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர் பிறகு தன்னை தேத்திக்கொண்டு மிருணாளினியின் ஆசையை நிறைவேற்ற தானே ஒரு தயாரிப்பாளராக மாறுகிறார். இதையடுத்து மிருணாளினி பெரிய கதாநாயகியாக மாறினாரா, இல்லையா? விஜய் ஆண்டனியும் அவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

பாலிவுடில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரப்னே பனாதி ஜோடி’ படத்தை உல்டா செய்து அதை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி சுவாரஸ்யமான ஒரு காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். என்னதான் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு திரைக்கதை வைத்து உருவாகிய படமாக ரோமியோ இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாதவாறு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்கும்படி இருந்தாலும், அதே போல் படத்தின் முடிவும் நாம் ஏற்கனவே யூகித்தபடி இருந்தாலும் படம் பார்ப்பதற்கு எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் செல்வது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

திருமணமே பிடிக்காத கதாநாயகிக்கு திருமணத்திற்குப் பிறகு நாயகியை நாயகன் ஒன்சைடாக காதல் செய்து எப்படி கரெக்ட் செய்கிறார் என்ற கதைக் கருவை வைத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்றாற் போல் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தியில் வெளியான ரப்னே பனாதி ஜோடி படத்தில் எந்த அளவு கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்ததோ, அதேபோல இந்த படத்திலும் வேறு ஒரு கதைக் கருவை வைத்துக் கொண்டு அதே மாதிரியான திரைக்கதை மூலம் அதே ஆழமான அழுத்தமான கதாபாத்திரத் தொடர்பை சரியாக கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்கள். 

vijay antony mirnalini ravi romeo movie review

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறார். எந்த வகையான கதையாக இருந்தாலும் தனது ட்ரேட் மார்க் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுக்க முயற்சி செய்கிறார். அந்தந்த கதைக்கு ஏற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை சரியாக கொடுத்து படத்திற்கும் பக்கபலமாக அமைகிறார். அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நாயகி மிருணாளினி நாம் இதுவரை பார்த்த படங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருத்தமாக இருக்கும் படியான தோற்றமும் நடிப்பும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி சுவாரசியமாக அமைந்து படத்துக்கு பிளசாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் யோகி பாபு வந்து செல்கிறார் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இவரை காட்டிலும் விடிவி கணேஷ் பல இடங்களில் நன்றாக கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார். இவருக்கும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி படத்தில் வரும் மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

பரத் தனசேகர் மற்றும் ரவி ராய்ஸ்டர் இசையில் பாடல்கள் வித்தியாசமான முயற்சியில் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில் படத்தின் சென்னை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தி சினிமாவுக்கும் இது பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதிது. இந்தி சினிமாவை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கும், பார்த்த தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. 


ரோமியோ - மினிமம் கியாரண்டி!

Next Story

“இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான்” - நீதிமன்றத்தில் காரசார வாதம் 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
ilayaraaja copywright issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இந்த நிலையில் எக்கோ நிறுவனத்தின் மனு தொடர்பான விசாரணை நீதிபகள் மாகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளரிடம் உள்ளது. இசையமைப்பாளர் குறிப்பிட்ட படத்திற்கு ஊதியம் பெற்ற உடன் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா?. இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 1970, 80, 90களில் இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போது இல்லை. இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.