Skip to main content

25ஆவது நாள்... பழைய காலத்தை மீண்டும் கொண்டு வந்த பேட்ட - விஸ்வாசம்! 

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

தமிழ் சினிமா வரலாற்றில் 2000 ஆண்டுகளின் பின்பாதியில் மல்டிப்ளக்ஸ்களின் வருகை அதிகரிக்கும் வரை, இணையத்தில் படங்கள் வெளியாகி தயாரிப்பாளர்களின் லாபத்தை பெருமளவில் பாதிக்கும் வரை, ஒரு வெற்றிப் படம் என்பதன் வரையறையே வேறாக இருந்தது.

 

viswasam 25



90களில் தொடர்ந்து ஒரே திரையரங்கில் நூறு நாட்கள் ஓடிய படங்கள்தான் வெற்றிப் படங்களாகக் கருதப்பட்டன. பின்னர் அது ஐம்பது நாட்களாகக் குறைந்தது. அதற்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் வெள்ளி விழாக்கள் சகஜமாக இருந்தன. வருடத்துக்கு பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய காலம் உண்டு. வெள்ளி விழா என்றால் 25 வாரங்கள் அதாவது 175 நாட்கள். இதற்கு கரகாட்டக்காரன் முதல் சந்திரமுகி வரை பல உதாரணங்கள் உண்டு. 2000 கிட்ஸ் காலத்து நடிகர்களில் பலருக்கும் இந்த வெள்ளி விழா கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அஜித்திற்கு 'காதல் கோட்டை', விஜய்க்கு 'காதலுக்கு மரியாதை' ஆகியவை வெள்ளிவிழா படங்கள். விக்ரமின் 'சேது', 'தூள்' உள்ளிட்ட சில படங்கள் நூறு நாட்களைத்தாண்டிய வெற்றிப் படங்கள். தனுஷுக்கு 'காதல் கொண்டேன்', சிம்புவுக்கு 'மன்மதன்' இந்த வகை. இப்போதும் பல படங்களுக்கு 100வது நாள் விளம்பரங்கள், போஸ்டர்கள் வருகின்றன. திரையரங்குகள் பெயர் இல்லாமலோ அல்லது ஒரே ஒரு அரங்கில் ஒரே ஒரு காட்சியுடன் வருபவை அவை.
 

aboorva sagodharargal

 

kushi 100


திருட்டு விசிடி, பின்னர் தமிழ் ராக்கர்ஸ் என அச்சுறுத்தல்கள் அதிகரித்த வேளையில் பெரிய நடிகர்கள் நடித்த படங்களை அதிகபட்சம் எத்தனை அரங்குகளில் வெளியிட முடியுமோ அத்தனை அரங்குகளில் வெளியிட்டு முதல் மூன்று நாட்கள் வசூலை அதிகரித்தனர். சென்னையில் இது முன்பே நடந்தாலும் தமிழகத்தின் பிற ஊர்களில் இந்தப் பழக்கம் கிட்டத்தட்ட ரஜினிகாந்த்தின் 'சிவாஜி' படத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட ஊர்களில் உள்ள அத்தனை அரங்குகளிலும் வெளியானது 'சிவாஜி'. அப்படி வெளியிட்டால்தான் திருட்டு விசிடியைத் தாண்டி லாபம் பெற முடியுமென்பது அன்றைய நிலை. இன்றும் அதேதான், இப்போது தமிழ் ராக்கர்ஸ். மட்டுமல்லாது அடுத்த வெளிவர வரிசையில் காத்திருக்கும் படங்கள்.

வெளியான மறுநாளே வெற்றி விழா கொண்டாடும் காலம் இது. இப்போதெல்லாம் வெளியான வாரக்கடைசியில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அரங்குகள் நிறைந்து அடுத்த ஒரு வாரம் முழுமையாக திரையரங்குகளில் கடந்துவிட்டால் அதுவே உண்மையான வெற்றியாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களும் கூட வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையில் பிற படங்களில் இருந்து மாறுபடுகின்றனவே தவிர படத்தின் வெற்றி கால அளவு என்பது கடந்த சில வருடங்களாக இரண்டு வாரங்கள் என்பதாகவே இருந்துவருகிறது. இத்தகைய காலகட்டத்தில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸில் ஒரு புயல் போல மையம் கொண்டிருக்கின்றன 'பேட்ட', 'விஸ்வாசம்' படங்கள். ஜனவரி 10ஆம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை மகிழ்வித்து பெரிய வெற்றியாகின. பொங்கல் விடுமுறை, இரண்டாம் வார இறுதி முடிந்தால் இந்த அலை ஓயும் என்று திரை பார்வையாளர்கள் நினைத்திருக்க, அதை உடைத்து இரண்டாம் வாரத்தையும் கடந்து மூன்றாம் வார இறுதியிலும் தற்போது வெளியாகியிருக்கும் புதிய படங்களுக்குப் போட்டியாக இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன. தொடக்கத்தில் அதிக அரங்குகளை ஆக்கிரமித்த 'பேட்ட', இரண்டாம் வாரத்தில் பின்செல்ல குடும்பங்களின் ஆதரவைப் பெற்ற 'விஸ்வாசம்' அதிக திரையரங்குகளுக்கு முன்னேறியது.

 

vaali



கடந்த வாரம் 'சிம்பா', 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்கள் வெளியாயின. இந்த இரண்டு படங்களும் சிறிய சலனத்தைக் கூட ஏற்படுத்தாமல் விஸ்வாசம், பேட்ட ராஜ்ஜியம் தொடர்ந்தது. இப்போது இந்த வாரம், வந்தா ராஜாவாதான் வருவேன், சர்வம் தாள மயம், பேரன்பு, சகா ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. STR, ஜி.வி.பிரகாஷ் இருவரது படங்களுக்கும் ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. STR, தன் ரசிகர்களுக்காக வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தார். 'சர்வம் தாள மயம்' ராஜிவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் பல ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் படம். நகரங்களில் இதற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. இத்தனைக்குப்பிறகும் இந்த வாரக்கடைசியிலும் 'விஸ்வாசம்' சென்னையில் ஓரளவு அதிக காட்சிகளைக் கொண்டும் பிற நகரங்களில் புதிய படங்களுக்கு இணையான காட்சிகளும் ஓடுகிறது. 'பேட்ட' கிட்டத்தட்ட இதே நிலையில் தொடர்கிறது. இந்த நிலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நேர்ந்திருப்பதாக விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்கிறார்கள்.

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவது வியாபார ரீதியில் நல்லதா என்று பயந்தவர்கள் இப்போது ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். தமிழக அளவில் தனியாக வெளியான படங்களை விட அதிக வசூலை தனித்தனியாக ஈட்டியிருக்கின்றன இவை. இரண்டு பெரிய நடிகர்கள் நடித்து ஒரே நாளில் வெளியாகி திரையரங்குகளை பிரித்துக்கொண்டு இன்னும் தொடரும் வகையில் 'விஸ்வாசம்', 'பேட்ட' இரண்டு படங்களும் வியாபார ரீதியில் மைல்கற்கள்தான். இந்தப் படங்களுக்கு இந்த வாரம் ஒட்டப்பட்டிருக்கும் 25ஆவது நாள் போஸ்டர்கள், பழைய பாணியில் உண்மை சொல்லும் போஸ்டர்கள் ஆகும்.

 

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

இப்ப வேதாளம்.. நெக்ஸ்ட் தூக்கு துரை.. - அஜித்தை விடாத சிரஞ்சீவி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

chiranjeevi next is ajith viswasam movie remake

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

 

சமீபகாலமாக ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சிரஞ்சீவி விஜய் நடித்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற தலைப்பிலும், மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' படத்தை 'காட்ஃபாதர்' என்ற தலைப்பிலும் தெலுங்கில் ரீமேக் செய்தார். அந்த வகையில், தற்போது அஜித்தின் 'வேதாளம்' பட ரீமேக்கை தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விஸ்வாசம்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை 'கைதி நம்பர் 150' இயக்கிய வி.வி.விநாயக் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

Next Story

”மரியாதைக்காக செய்தால்கூட அதை அஜித் விரும்பமாட்டார்” - அஜித் குறித்து நெகிழ்ந்த வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

 Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, அஜித்துடனான விஸ்வாசம் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”விஸ்வாசம் படத்தில் அஜித் சாருக்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் வாழ்க்கையில் சொந்த அப்பாவிடம்கூட நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் பாசக்கார பையன். தலைக்கணம் இல்லாத ஈவிரக்கம் கொண்ட மனிதர். அவங்க ஷாட் முடிந்த உடனே எல்லோரும் கேரவனுக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் நம் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் பக்கத்தில் வரும்பொழுது மரியாதைக்காக எழுந்து நின்றால்கூட, நீங்கள் அப்பா, நான் பையன், நீங்கள் போய் எழுந்து நிற்கலாமா என்பார். 

 

ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் கையாலே அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருந்தாலும் அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது”. இவ்வாறு வெள்ளப்பாண்டி தெரிவித்தார்.