
மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன். இப்படம் வெற்றிகரமாக 3வது வாரம் திரையரங்கில் ஓடி வரும் நிலையில், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இப்படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பால் ஓ.டி.டி. வெளியீட்டை 8 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கிடையில் அமரன் படத்தை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது ரஜினி, சிவகுமார், சூர்யா, ஜோதிகா, சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.
அமரன் படத்திற்கு ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில் மறுபக்கம் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அமரன் படத்தில் காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துள்ளதாக கடுமையாக விமர்சித்திருந்தார். அதே போல் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர், காஷ்மீர் மக்களின் விடுதலை எண்ணத்தை பயங்கரவாத நோக்கில் காட்சிப்படுத்துவதாகக் கூறி அமரன் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக சென்னையிலுள்ள பல்வேறு திரையரங்குகளில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு வந்த திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியிலுள்ள திரையரங்கம் ஒன்றில் அதிகாலையில் இரண்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோவை கைப்பற்றிய போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.