Skip to main content

அதிகரிக்கும் எதிர்ப்பு; தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Petition filed in Chennai to ban the film The Kerala Story

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

 

இப்படத்தின் ட்ரைலர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என 2 தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். 2 தரப்பு மனுவும் தனித்தனியே விசாரணைக்கு வந்தபோது அம்மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது. பின்பு இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இதனிடையே  தமிழ்நாடு உளவுத்துறை, கேரளாவில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என தெரிவித்து இப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை செய்தது. இந்த நிலையில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷன் என்பவர் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கேரளாவைச் சேர்ந்த ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரம், பாத்திமா பா என மதம் மாறி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியாக உருவாகியுள்ளதாகவும் தன்னைப்போல மதம் மாற்றப்பட்ட 32 ஆயிரம் பெண்கள் சிரியா, ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் கூறுகிறது.

 

மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளின் உண்மைத்தன்மையை சரி பார்க்கும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியிருந்தேன். மேலும், இந்தியாவில் இருந்து எத்தனை இந்து பெண்கள் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு விற்கப்பட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை கேட்ட போது  ‘காவல்துறை மற்றும் பொது அமைதி என்பது மாநில விவகாரம்’ எனப் பதிலளிக்கப்பட்டது. இதன் மூலம் தி கேரளா ஸ்டோரி படத்தில் கூறப்பட்ட தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என  நிரூபணம் ஆகியுள்ளது. படத்தின் டீசரை தணிக்கை சான்றிதழ் வாங்காமல் சட்டவிரோதமாக சன்சைன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. 

 

அதனால் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை தடை செய்யக் கோரி தமிழக முதல்வர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளேன். இந்தியாவை அவமானப்படுத்தும் வகையிலும், அமைதியை விரும்பும் இந்தியாவை, உலகிலேயே தீவிரவாதிகளை உருவாக்கும் நாடாக சித்தரிக்கும் வகையிலும் படம் உருவாகியுள்ளது. இந்திய இறையாண்மைக்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவித்து, நாட்டில் உள்ள பொது அமைதியை இப்படம் கெடுக்கும். எனவே, இந்தப் படத்தை வெளியிட முழுமையாக தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ - மஞ்சும்மல் பாய்ஸின் ஓடிடி அப்டேட்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
manjummel boys ott update

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருந்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத்தின் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையெடுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.