மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் - இளயா - சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘வீர தமிழச்சி’. இப்படத்தில் ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜூபின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “குடும்பத்தில் நடைபெறும் உண்மைகளை யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் வீரத்தமிழர். அந்த வகையில் எங்கள் இயக்குநர் ராஜகுமாரன் தான் சிறந்த வீரத்தமிழர். அவருடைய பேச்சில் உண்மை படார் படார் என வெளிப்பட்டது. நாம் இதுவரை தேவயானி மேடத்தை சாப்ட் ஆக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டில் அவர் ஆக்ஷன் ஹீரோயின் என்பது இப்போதுதான் தெரியும். கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்தவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.
முயற்சிக்கும், விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம், என்றால், முயற்சியை நாம் செய்து கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் முயற்சி நம்மை விடாது. அதுதான் விடா முயற்சி. வீட்டை நன்றாக கட்ட வேண்டும் என்றால் நல்லதொரு கொத்தனார் வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு நார் வேண்டும் ஒன்று நாத்தனார். மற்றொன்று கொழுந்தனார். இயக்குநர் நல்லதொரு கொத்தனார். படத்தில் பாட்டு எங்கு வைக்க வேண்டும்? பைட்டு எங்கு வைக்க வேண்டும்? என தெரிந்து வைத்திருக்கிறார்.
வீர தமிழச்சி யார் என்றால்.. புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருந்து, அவருடைய திறமையை வெளிப்படுத்துபவர் தான் வீர தமிழச்சி. அப்படிப் பார்த்தால் இயக்குநருடைய மனைவி தான் வீர தமிழச்சி. சில தலைப்புகளை கேள்விப்படும் போது தான் எப்படி இந்த தலைப்பை இதுவரை தவற விட்டார்கள் என்று தோன்றும். அந்த வகையில் இந்த வீர தமிழச்சி டைட்டில் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் தான் வேலு நாச்சியார் போன்ற ஏராளமான வீர தமிழச்சிகள் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்தான் வீர தமிழச்சி.
வீர தமிழச்சி என்பது அடிப்பதோ உதைப்பதோ.அல்ல. காலனியால் அடிப்பதோ கைகளால் அடிப்பதோ அல்ல. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மிருகம் தன்னை சிதைத்ததை இந்த சமூகத்தில் துணிச்சலுடன் புகாராக அளித்த பெண் தான் வீர தமிழச்சி. கராத்தே கற்பது, துப்பாக்கி சுடுவது, சிலம்பம் சுற்றுவது, இதெல்லாம் வீரமல்ல. வீரம் என்பது உடலில் அல்ல, மனதில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இதைத்தான் நான் பார்த்தேன். ஒரு பெண் அநியாயத்திற்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும், அதை சொல்வது தான் இந்த வீர தமிழச்சி” என்றார்.