ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடித்துள்ளனர். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு பேசுகையில், “வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங், இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.