“நாட்டில் பெரும்பாலானவர்களிடம் மிருகத்தன்மை தான் அதிகமாக இருக்கிறது” - பேரரசு
மாணிக் ஜெய்.என் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு இந்தி மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.
இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக எல்.என்.டி. எத்திஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர். கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்று ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் பேரரசு, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா, கன்னடம் பேசினால் தப்பாக போய்விடுமா என கொஞ்சம் குழப்பம் இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் நீங்கள் எதை வந்து பேசினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்.. ரஜினிகாந்தை பிடித்து போனால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுவோம். கன்னடத்து பைங்கிளி என சரோஜாதேவியை கொண்டாடுவோம். ஆனால் இங்கிருந்து ஒரு தமிழ் நடிகையை அனுப்புகிறோம், அங்கே யாராவது தமிழ் பைங்கிளி என்று கூறுவார்களா ?
உலகத்தின் முதல் மொழி தமிழ் தான். அதிலிருந்து தான் தெலுங்கு போனது. மலையாளம் உருவானது. இதிலிருந்து தான் கன்னடம் உருவானது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் நம்புகிறோம். கன்னடம் வேறு, தமிழ் வேறு என்றால் ஓகே. நாங்கள் எந்த விவாதமும் பண்ண மாட்டோம். தமிழ் மண்ணில் மொழிக்கும் கலைக்கும் சம்பந்தமில்லை. ஒரு டிரைலரிலேயே த்ரில்லரை கொண்டு வருவது பெரிய விஷயம். ஆனால் அதை பார்க்கும்போது ஒரு குழப்பத்தையும் உருவாக்கியது. காரணம் இங்கே 90 சதவீதம் பேர் மிருகமாகத்தான் இருக்கிறோம். அன்று சாத்தான்குளம், இன்று திருப்புவனம்.. விசாரணை எதுவும் இல்லாமல் ஒரு ஆளை அடித்து கொன்று உள்ளார்கள். அவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும் ? அவர்கள் மிருகங்கள்தான். நாட்டில் பெரும்பாலானவர்களிடம் மிருகத்தன்மை தான் அதிகமாக இருக்கிறது. மனித தன்மை குறைந்துவிட்டது.
இன்று போதைப் போல் கலாச்சாரம் அதிகமாகி விட்டது சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நாட்டில் யாராவது தண்ணி அடித்து விட்டு விழுந்து கிடந்தால் அது சாதாரண விஷயம். ஒரு சினிமாக்காரர் அப்படி இருந்தால் அங்கு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிடும். நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைதாகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்தது தவறுதான். கைதானதும் சரியான விஷயம் தான். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த நபரின் முகத்தை யாருக்காவது காட்டினார்களா ? திருப்புவனம் காவல் நிலைய சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி காவலர்களின் முகத்தை எங்கேயாவது காட்டி இருக்கிறார்களா ? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் ஒரு நடிகரை பயங்கரவாதியை போல சித்தரிப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் போதை பொருளை விற்றவன் புகைப்படம் கூட இப்படி வந்ததில்லை. அதனால் சினிமாக்காரர்கள் இப்படி நாம் ஒரு தவறு செய்தால் நம்மை ஒரு தேசத்துரோகிகள் போல இந்த உலகத்தில் காட்டி விடுவார்கள் என்பதை உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும். ஆனால் தேசத்துரோகம் பண்ணியவர்களை அப்படி காட்ட மாட்டார்கள்.
சமூக வலைதளங்களில் கூட வன்மத்தை கக்கும் நிறைய மிருகங்கள் இருக்கின்றார்கள். ஒரு படத்தை பார்க்காமலேயே விமர்சனம் செய்து அதை காலி செய்கிறார்கள். அப்படி ஒரு நோய் இப்போது வந்திருக்கிறது. இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கே பிடிக்கவில்லை என்பது போல, அந்த படத்தை காலி பண்ணி விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த கைமேரா படத்தின் கதையம்சம் போல வந்தது இல்லை. இயக்குநர் மாணிக் ஜெய்யின் இந்த புதிய முயற்சி வெற்றி அடைய வேண்டும்” என்றார்.