
தன் உடம்பைக் குறைப்பதற்காக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் ’பெண்குயின்’ படத்தில் நடித்துள்ளார். கர்ப்பிணிப் பெண் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கீர்த்தியின் பிறந்தநாளன்று வெளியானது. முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. இதற்கிடையே ரிலீசுக்குத் தயாராக இருக்கும் படங்களை 'அமேசான்' நிறுவனம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் 'பொன்மகள் வந்தாள்', 'டக்கர்' ஆகிய படங்களைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனம் 'பெண்குயின்' படத்தையும் கைப்பற்றியது. இந்நிலையில் ’பெண்குயின்’ படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிவுள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.