Skip to main content

ஆளுநருக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

pc sreeram voice against tamilnadu governor rn ravi

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.

 

முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.

 

ஆளுநர் ரவியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இணையவாசிகள் பலரும் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டு ஆளுநர் ரவியின் கருத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், "ஆளுநர் அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு மாநிலத்தின் ஆளுநர், தற்போது அரசியல்வாதியைப் போல நடந்து கொண்டிருக்கிறார். அவருடைய முதலாளிகளுக்கு இந்தத் தேர்தலை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தேசத்திற்காக எமர்ஜென்சி காலகட்டத்தில் துணிவுடன் நாம் போரிட்டிருக்கிறோம். 

 

இப்போதைய யுத்தம் என்பது பிரிவினைவாதத்திற்கும் வெறுப்புப் பேச்சிற்கும் எதிராக நாம் புரிய வேண்டிய ஒன்று. ஆளுநர் தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும். அவருடைய பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது. நம்முடைய தேசப்பற்றை வரலாறு அறியும். ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழியை அதிகம் நேசிப்பவன். தாய்மொழியின் மீதான அன்பே நம்மை மனிதத்துடன் வைத்திருக்கிறது"  என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்