/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/449_11.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக ட்ரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்தது.
பலரது எதிர்பார்ப்பை தாண்டி கடந்த 20ஆம் தேதி இப்படம் வெளியானது. முதல் பாகத்தில் பல்வேறு உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒன்று சேர்த்து இயக்கியிருந்த வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் எதற்காக பொது வாழ்க்கைக்கு வந்தார், பின்பு ஏன் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு மாறினார், அதன் பிறகு அவர் என்ன ஆனார்... என பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் படம் பதிலளிக்கிறது.
இப்படம் குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தனது கருத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், “நக்சல் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது ‘உபா’ பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) கவனம் செலுத்த வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/450_55.jpg)
காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குநர். திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி... தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார். பெருமாளின் பயங்கரவாதத்தினால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம். பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை... திமுக ஊக்குவிப்பது அம்பலமாகிறது. நக்சல்வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும். சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் அயோக்கியர்களே. திரையரங்கில் கைதட்டி விசிலடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும். நக்சல் வாதத்தினால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான். அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள்... வாயில் மட்டுமல்ல எல்லாவற்றின் மூலமாகவும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அர்ஜூன் சம்பத் பதிவிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தப் படம் நமது கடந்த கால வரலாற்றையும் நிகழ்கால யதார்த்தத்தையும் சொல்கிற உன்னதமான படம். தயவு செய்து வளருங்கள். ஒரு திரைப்படத்தை கலை வடிவமாக பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)