pc sreeram about india bharat issue

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

Advertisment

இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அமிதாப் பச்சன், "பாரத் மாதா கீ ஜே" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பாரதம் என்று அழைப்பதற்கு ஆதரவாக பதிவிட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் பதிவிற்கு, விஷ்ணு விஷால், ""இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா" என கேள்வியெழுப்பியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம், அவரது எக்ஸ் தளபக்கத்தில், "நாம் இந்தியாவை காக்க பிறந்தவர்கள். இந்தியா புதிய காற்றை சுவாசிக்கும்" என குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாகவே தொடர்ச்சியாக நிறைய சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.