ஹரியான்வி மொழியில் ஆல்பம் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அஞ்சலி ராகவ். இவரும் போஜ்புரி திரைத்துறையை சேர்ந்த, நடிகர் மற்றும் பின்னணி பாடகர் பவன் சிங் என்பவரும் ‘சயான் சேவா கரே' என்ற போஜ்புரி ஆல்பம் வீடியோவில் இணைந்து நடித்துள்ளனர். இந்த வீடியோ கடந்த 27ஆம் தேதி வெளியானது. இதனால் இந்த வீடியோவை புரொமோட் செய்யும் முயற்சியில் அஞ்சலி ராகவும் பவன் சிங்கும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் லக்னோவில், புரொமோஷன் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகை அஞ்சலி ராகவ் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது, நடிகர் பவன் சிங், நடிகையின் இடுப்பை தொட்டார். இடுப்பின் எதோ ஒன்று இருப்பதாக சொல்லி, மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தார். நடிகை அசௌகரியமாக உணர்ந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பவன் சிங்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நடிகைக்கும் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஏன் திருப்பி அடிக்கவில்லை, ஏன் உடனடியாக ரியாக்ட் செய்யவில்லை என கேட்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட நடிகை அஞ்சலி ராகவ், “கடந்த இரண்டு நாட்களாக நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன். என்னை குறை கூறுவதோடு நான் அதை ரசித்ததாகவும் மீம்ஸ் போடுகிறார்கள். பொதுவெளியில் என்னுடைய சம்மதம் இல்லாமல் யாராவது இப்படி தொட்டால் நான் எப்படி அதை ரசிப்பேன்?. பவன் சிங் ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னதும், என் உடையின் ஸ்டிக்கர் வெளியில் தெரிகிறது போல என நினைத்தேன். ஏனென்றால் அன்று நான் அணிந்திருந்தது புது புடவை. அவர் மீண்டும் மீண்டும் சொன்னதும் உண்மையிலேயே ஏதோ ஒன்று இருக்கிறது என எண்ணி அதை சரி செய்ய வேண்டும் என அந்த இடத்தில் நினைத்தேன். ஆனல் என் டீமிடம் என் இடுப்பில் எதாவது இருக்கிறதா என கேட்ட போது அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை என சொல்ல பிறகு தான், நான் மோசமானதாக உணர்ந்தேன். பின்பு எனக்கு கோபம் வந்து அழவும் தொடங்கிவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மேடைக்கு பின்னால் பவன் சிங்கிடம் இது குறித்து கேட்க வேண்டும் என இருந்தேன். ஆனால் அவர் அதற்குள் கிளம்பிவிட்டார்” என்றார். மேலும் அதிரடியாக இனிமேல் போஜ்புரி திரைத்துறையில் நான் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.
இதையடுத்து பவன் சிங்கிற்கு எதிர்ப்புகள் அதிகரிகத்தது. இவர் சினிமாவத் தாண்டி அரசியலிலும் குறிப்பாக ஆளும் அரசான பிஜேபி-யில் இருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் எதிர்ப்புகள் எழுந்தது. பின்பு இரண்டு நாள் கழித்து இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறியதாவது, “என்னுடைய பிஸியான வேலை காரணமாக உங்களின் வீடியோவை பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது பார்த்ததும் வருத்தப்பட்டேன். நான் எந்த தவறான நோக்கத்தில் அப்படி செய்யவில்லை. இருப்பினும் நான் செய்தது உங்களை புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இதற்கு பதிலளித்த அஞ்சலி ராகவ், “பவன் சிங் என்னை விட திரைத்துறையில் சீனியர், அவரது மன்னிப்பை நா ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தை நான் பெரிதாக்க விரும்பவில்லை” என முடித்துக் கொண்டார்.