காவி உடை சர்ச்சை; எதிர்க்கும் பா.ஜ.க; பதிலடி கொடுத்த ஷாருக்கான்

pathaan movie issue Shah Rukh Khan reply

ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் பாஜகவை சார்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப்பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிட தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அயோத்தியைச் சேர்ந்த 'அனுமன்காரி' மடத்தைச் சேர்ந்த ராஜு தாஸ், பதான் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

மத்தியப்பிரதேசத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் பதான் திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்து பாலியலில் ஈடுபடுகிறார்கள்; அதெல்லாம் தவறில்லையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசிய ஷாருக்கான் 'பதான்' படம் எனக் குறிப்பிடாமல் சமூகவலைத்தளம் பற்றி பேசியுள்ளார். அவர் பேசுகையில், "இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின்பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது. அதில் எதிர்மறையாக வைக்கும் கருத்துக்கள் சினிமாவை பாதிக்கிறது. அந்த எதிர்மறைக் கருத்துக்கள் அதிகரிக்கும் போது படத்தின் வணிகம் அதிகமாகிறது. ஆனால், சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட குறுகிய பார்வையிலே இயங்குகிறது" எனப் பேசியுள்ளார்.

deepika padukone sharukh khan
இதையும் படியுங்கள்
Subscribe