கேரளாவில் 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதை தொடர்ந்து மலையாள சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடர் கோரிக்கையால் மலையாள திரையுலகில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் கடந்த ஆண்டு சில பகுதிகள் மட்டும் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் பல்வேறு மலையாளத்தில் முன்னணி பிரபலங்கள் மற்றும் மூத்த நடிகர்கள், பிரபல இயக்குநர்கள் என பலரும் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மலையாளத் திரையுலகை தாண்டி இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொது வெளியில் பேசத் தொடங்கினர். இந்த புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இக்குழு பொதுவெளியில் புகார் கூறிய நடிகைகளிடம் நேரில் விசாரித்து வாக்கு மூலம் பெற்று சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் விசாரித்து வந்து சிறப்பு புலனாய்வு குழு, தற்போது வழக்குகளை முடிக்க தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து வுமன் இன் சினிமா கலெக்டிவ் உறுப்பினரும் நடிகையுமான பார்வதி ஹேமா கமிட்டி நிலைமை குறித்து தற்போது கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரள முதல்வர் பினராயில் விஜயனை டேக் செய்து வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது இந்த குழு அமைக்கப்பட்ட உண்மையான காரணத்தில் நாம் கவனம் செலுத்தலாமா? சினிமா துறையில் ஒழுங்குமுறைகளை உருவாக்க உதவும் கொள்கைகளை எப்போது அமல்படுத்துவது? அதோட நிலை என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை குறிக்கும் வகையில், “அவசரம் ஏதும் இல்லை? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது” என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.