
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது.
இப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.